
இந்தியாவும், பாகிஸ்தானும் வெறுப்புணர்வை புதைத்து விட வேண்டும் என்று முஷரப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தீர்வு காண விருப்பம் வேண்டும்
டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்துகிற தலைமைத்துவம் குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நேற்று கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடமும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– 1950–களிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் பதிலிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பதிலிப்போருக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதலில் விருப்பம் கொள்ள வேண்டும்.
பெரிய நாடு ஒத்துப்போக வேண்டும்
சமரசமும், ஒத்துப்போதலும் முதலில் பெரிய நாட்டிடமிருந்து, வலுவான நாட்டிடமிருந்து (இந்தியாவிடமிருந்து) வர வேண்டும். சிறிய நாட்டிடமிருந்து, பலவீனமான நாட்டிடமிருந்து (பாகிஸ்தான்) இது முதலில் வந்தால் மக்கள் எதிர்மறையாக அர்த்தம் எடுத்துக்கொள்வார்கள். இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம், சமூக ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. ஆனால் இரு நாடுகள் இடையேயான முக்கியப் பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் பெரிய அளவில் முன்னோக்கிப்போக முடியாது. அரசியல், பொருளாதார விவகாரங்கள் ஒரே நேரத்தில் தீர்க்கப்பட நடவடிக்கை தேவை.
உறவு பாதிக்க காரணம்
தேசப்பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்கள், 3 போர்கள், ஆயுதப்போட்டி, இரு நாடுகளின் உளவு அமைப்புகளிடையேயான நேருக்கு நேர் மோதல்கள், முக்கிய அம்சங்களில் இரு நாடுகளிடையே நம்பிக்கையின்மை ஆகியவைதான் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்க காரணம் ஆகும். இரு நாடுகள் இடையேயான நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள்தான் பகைமை உணர்வை, மோதல்களை, சண்டைகளை ஏற்படுத்தியுள்ளன.
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு
நாம் இதற்கு (காஷ்மீர் பிரச்சினைக்கு) தீர்வு காண வேண்டும். இதுதான் போரையும், மோதலையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் முஜாகிதீன்களையும், மத தீவிரவாதத்தையும் ஏற்படுத்துகிறது. ஐரோப்பிய நாடுகளை பார்த்து, இந்தியாவும், பாகிஸ்தானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நமது பகையுணர்வை புதைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாகிஸ்தான் ராணுவம் இப்போது சாதகமாக உள்ளது. இவ்வாறு முஷரப் கூறினார்.




0 comments: on "இந்தியாவும், பாகிஸ்தானும் பகைமை உணர்வை புதைத்து விட வேண்டும்: முஷரப்"
Post a Comment