புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பரமானந்த் என்ற சந்தீப் டாங்கே, ராம்ஜி என்ற கல்சங்கரா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான இந்தூரைச் சார்ந்த இருவரின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசாக என்.ஐ.ஏ அறிவித்திருந்தது.
இந்த வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இவர்களை ப்ராஸ்க்யூட்(சட்ட நடவடிக்கை) செய்ய என்.ஐ.ஏ அனுமதி கோரியதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். வலதுசாரி தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முதலில் மாநில அரசுகள் அலட்சியமாக விசாரணை நடத்தியதாகவும், என்.ஐ.ஏ இவ்வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் இவ்வழக்குகளின் விசாரணை யதார்த்த வழியில் செல்வதாகவும் சிதம்பரம் கூறினார்.
டாங்கேயும், கல்சங்கராவும் இணைந்து மக்கா மஸ்ஜிதில் திடீரென வெடிக்கும் இரண்டு குண்டுகளை நிறுவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2007 மே மாதம் 18-ஆம் தேதி மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பில் ஒன்பது பேரும் தொடர்ந்து நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். இக்குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக அநியாயமாக குற்றம் சாட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. முஸ்லிம் போராளிக் குழுக்கள்தாம் இச்சம்பவத்திற்கு காரணம் என பரப்புரைச் செய்யப்பட்டது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த, மும்பை தாக்குதலின் போது மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்ட ஹேமந்த் கர்கரேயின் முயற்சியின் விளைவாக இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது மேலும் வெட்ட வெளிச்சமானது.
2006 மற்றும் 2008-ஆம் ஆண்டில் மலேகானில் நடந்த குண்டுவெடிப்புகள், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளை திட்டமிட்டு நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தாம் என்பதை அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
சுவாமி அஸிமானாந்தா(நபா குமார் சர்க்கார்), சுனில் ஜோஷி, தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா ஆகியோர் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆவர்.
News@thoothu
0 comments: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:டாங்கே, கல்சங்கரா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி!"
Post a Comment