புதுடெல்லி:குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தனது மத்திய நிதியமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ததோடு, தீவிர அரசியலுக்கும் விடை கொடுத்தார்.
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில்,குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக நேற்றே பிரணாப் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், இன்று அவர் தமது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.
பதவி விலகும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், நிதியமைச்சகத்தில் உள்ள தமது அலுவலக சகாக்களை தாம் பிரிய நேரிடுவதாகவும், இன்று முதல் தாம் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமக்கு ஆதரவளித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஃபார்வார்டு பிளாக் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
பிரணாப் வகித்த நிதியமைச்சர் இலாகாவை பிரதமர் மன்மோகன் சிங்கே வைத்துக்கொள்வார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்,அதனை டெல்லி வட்டாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
0 comments: on "நிதி அமைச்சர் பதவியிலிருந்து பிரணாப் ராஜினாமா!"
Post a Comment