தலைப்புச் செய்தி

Wednesday, June 13, 2012

ஃபஸல் கொலை:குற்றப்பத்திரிகை தாக்கல்!


கொச்சி(கேரளா):கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் ஃபஸல் கொலைவழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்பட எட்டு பேர் மீது எர்ணாகுளம் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவெனில் ஃபஸலை கொலைச்செய்ய சதித்திட்டம் தீட்டிய சி.பி.எம் தலைவர்களை கைது செய்யாமலேயே சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஃபஸல் கொலைக்கு பிறகு இச்சம்பவத்தை வகுப்புவாத பிரச்சனையாக சித்தரிக்க முயற்சி நடந்ததாகவும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் கூறுகிறது. இவ்வழக்கில் எம்.கே.சுனில் குமார் என்ற கொடி சுனில் முதல் குற்றவாளி. பிஜு என்ற பாச்சுட்டி பிஜு, ஜிதேஷ் என்ற ஜித்து, அருண்தாஸ் என்ற செரிய அருட்டன், எம்.கே.கலேஷ் என்ற பாபு, அருண்குமார், சந்திரசேகரன் என்ற காராயி சந்திரசேகரன், ராஜன் என்ற காராய் ராஜன் ஆகியோர் 2 முதல் 8 வரையிலான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஃபஸல் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.கே.சுனில் குமார் என்ற கொடி சுனில், அண்மையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர் டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபஸல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டத்தில் க்ரிமினல் சதித்திட்டம், கொலை, சட்டவிரோதமாக ஒன்று கூடல் ஆகிய பிரிவுகளும், ஆயுத சட்டத்தில் பல்வேறு பிரிவுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபிகள் என்றும், என்.டி.எஃபின் வளர்ச்சியை தடுக்கவே ஃபஸலை அவர்கள் கொலைச் செய்ததாகவும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் கூறுகிறது. இவ்வழக்கில் எட்டுபேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அடையாளம் காணமுடியாத மேலும் 2 குற்றவாளிகளும் உள்ளனர் என்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் கூறுகிறது. இவர்களுக்கு காராய் ராஜன், காராய் சந்திரசேகரன் ஆகியோருடன் தொடர்பு இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவங்காடு உள்ளூர் செயலாளராக இருந்த காராய் சந்திரசேகரன் ஃபஸல் கொலையில் முக்கிய சூத்திரதாரி ஆவார். தலச்சேரி பகுதியில் பல்வேறு அரசியல் கொலைகளுக்கு திட்டம் தீட்டியதில் இவருக்கு பங்கிருப்பதாகவும், விசாரணையை திசை திருப்ப சி.பி.எம் தலைவர்களான காராய் ராஜனும், காராய் சந்திரசேகரனும் முயற்சித்ததாகவும் சி.பி.ஐயின் இறுதி அறிக்கை கூறுகிறது.
2006-ஆம் ஆண்டு மே மாதம் ஃபஸலை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. அன்றைய சட்டப்பேரவை தேர்தலில் என்.டி.எஃபின் ஆதரவை தேட சி.பி.எம்மிற்கு நிர்பந்தம் ஏற்பட்டது கொலையில் முடிந்தது. கொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக சித்தரிக்க குற்றவாளிகளான சி.பி.எம் தலைவர்கள் முயற்சித்தனர். சி.பி.எம் கட்சியை விட்டு விலகி ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்த அசோகன் என்பவரின் நெருங்கிய உறவினரான ஆர்.எஸ்.எஸ் மண்டல காரியவாஹின் வீட்டிற்கு அருகே ஃபஸலின் இரத்தம் புரண்ட கைக்குட்டையை(hand kerchief) போட்டது விசாரணையை திசை திருப்புவதற்காகும் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.
சி.பி.எம் தலைவர்கள் கொலையாளிகளுக்கு தலைமறைவாக தங்க இடத்தை ஏற்பாடுச்செய்து கொடுத்துள்ளனர். மேலும் மைசூருக்கு உல்லாச பயணம் செல்ல ஏற்பாடுச் செய்தனர். ஃபஸலின் கொலைக்கு நேரடி சாட்சியான ஸமீரா என்ற பெண்மணிக்கு சி.பி.எம் தலைவர்கள் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததும் சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
தலச்சேரி பகுதியில் நடந்த பெரும்பாலான அரசியல் கொலைகளின் பின்னணியில் செயல்பட்டது சி.பி.எம் தலைவர்களான காராய் சந்திரசேகரன் தாம் என சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் கூறுகிறது.
சி.பி.ஐ திருவனந்தபுரம் யூனிட்டில் இன்ஸ்பெக்டர் எம்.ஸலீம் சாஹிப் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தார். இவ்வழக்கில் 174 சாட்சிகளின் பட்டியலும், கைப்பற்றப்பட்ட ஏழு பொருட்களும் அறிக்கையுடன் சி.பி.ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஃபஸல் கொலை:குற்றப்பத்திரிகை தாக்கல்!"

Post a Comment