தலைப்புச் செய்தி

Sunday, June 10, 2012

உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்: சஞ்சய் ஜோஷி பா.ஜ.கவை விட்டு விலகினார்!


புதுடெல்லி:பா.ஜ.கவில் நடந்து வந்த உட்கட்சி பூசலின் திரையை விலக்கிக்கொண்டு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் சஞ்சய் ஜோஷி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் எதிரியான சஞ்சய் ஜோஷி, பா.ஜ.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தது நிதின் கட்கரிக்கு இன்னொரு பின்னடைவாக மாறியுள்ளது. சஞ்சய் ஜோஷியின் ராஜினாமாவை கட்கரி ஏற்றுக்கொண்டார்.
2005-ம் ஆண்டுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகியிருந்த சஞ்சய் ஜோஷியை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் கட்சிக்கு கொண்டுவந்து, தேசிய செயற்குழு உறுப்பினராக்கினார் நிதின் கட்கரி.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆசியும் சஞ்சய்ஜோஷிக்கு இருந்தது. ஆனால், கட்சியை தனது வழியில் செலுத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் எதிர்ப்பின் முன்னால் கட்கரியின் நடவடிக்கைக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதை சஞ்சய் ஜோஷியின் ராஜினாமா நிரூபித்துள்ளது.
சஞ்சய்ஜோஷி கட்சிக்கு திரும்பியதை கண்டித்து கடந்த டிசம்பரில் டெல்லியில் நடந்த முக்கிய கட்சிக் கூட்டத்தை மோடி புறக்கணித்தார்.
உ.பி மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்தவும் மோடி செல்லவில்லை. கடந்த மாதம் மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என மோடி கட்சி தலைமைக்கு மிரட்டல் விடுத்தார்.
2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் எதிர்கொள்ளவிருக்கும் வேளையில் மோடியை பகைத்துக்கொள்வது சரியல்ல என்பதை உணர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆலோசனையின் பேரில் ஜோஷி தேசியசெயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தார்.
மும்பை செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என கூறிய மோடி, சஞ்சய்ஜோஷி ராஜினாமாச் செய்தவுடன் அன்றைய தினமே மும்பைக்கு வந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
கட்சியில் எதிராளிகளை அடக்கி ஒடுக்கும் மோடியின் செயலுக்கு தேசிய அளவிலும், குஜராத்தில் மாநிலத்திலும் கட்சியில் எதிர்ப்பு வலுத்துவருகிறது. மோடியின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அதிருப்தியில் உள்ளவர்களை ஒன்றிணைத்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மோடியை தோற்கடிக்க முன்னாள் பா.ஜ.க முதல்வர் கேஷுபாய் பட்டேல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாராக உள்ள சஞ்சய் ஜோஷியை முன்னிறுத்தி மோடி எதிர்ப்புக்களத்தை உருவாக்கலாம் என திட்டமிட்டிருந்த சூழலில் ஜோஷி ராஜினாமாச் செய்துள்ளார். சஞ்சய் ஜோஷியை ஆதரித்தும், மோடியின் அடாவடித்தனங்களை எதிர்த்தும் நேற்று முன்தினம் டெல்லி பா.ஜ.க அலுவலகம் முன்பும், அஹ்மதாபாத்திலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்: சஞ்சய் ஜோஷி பா.ஜ.கவை விட்டு விலகினார்!"

Post a Comment