மதுரை:மதுரை அருகே கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஒருவர் மர்ம நபர்களால் கல்லால் தாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் வில்சன்(56). கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் எனக் கூறப்படுகிறது.
இவர் இருசக்கர வாகனத்தில் கிராமப்புறங்களுக்குச் சென்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. தூத்துக்குடி பகுதியிலிருந்து மதுரை யா.ஒத்தக்கடை பகுதிக்கு வந்த வில்சன் திருமோகூர் செல்லும் வழியில் மீனாட்சிநகர் அருகே சாலையோரத்தில் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த யா.ஒத்தக்கடை போலீஸார் விரைந்து சென்று பிரச்சாரகர் வில்சனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போதகர் வெள்ளை நிற சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
பெரிய கல்லை வில்சனின் தலையில் போட்டு மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பெரிய அளவிலான கல்லை தனிநபர் தூக்கமுடியாது என்பதால் கும்பலாக வந்தவர்களே இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வில்சனுக்கு திருமணமாகி மகன் உள்ளார். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்சனின் வீட்டார் வந்த பிறகே முழுவிவரம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரச்சாரகர் வில்சன் கொலையானது கொள்ளையடிக்கும் கும்பலால் நிகழ்த்தப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
News@thoothu




0 comments: on "மதுரை அருகே கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் படுகொலை!"
Post a Comment