புதுடெல்லி:இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் சிறுபான்மை பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ஆந்திரபிரதேச மாநில உயர்நீதிமன்றம் தடைச்செய்துள்ள சூழலில் இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி உயர் கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை வழங்க மறுக்க முயலுகின்றன. இதன் மூலம் உள் ஒதுக்கீட்டின் மூலம் ஐ.ஐ.டிகளில் கல்வி பயில அனுமதி கிடைத்துள்ள 325 முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அண்மையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஒ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சட்டரீதியாக ஏதேனும் உத்தரவு வரும் வரை ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றப் போவதாக ஐ.ஐ.டி அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால பெஞ்சை அணுகப்போவதாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கூட காத்திராமல் ஐ.ஐ.டி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறையின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும், அவர்களின் கருத்தைக் கேட்டபிறகே இம்முடிவை எடுத்துள்ளதாகவும் ஐ.ஐ.டி-ஜெ.இ.இ-2012 ஆர்கனைசிங் சேர்மன் ஜி.பி.ரெட்டி தெரிவித்துள்ளார்.
சார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு இதர ஒ.பி.சி மாணவர்களுக்கு அளிப்பது போன்ற ஆப்ஷன் வழங்கவேண்டும். இவ்விவகாரத்தில் சட்டரீதியாக மாற்று அறிவிப்புகள் வராவிட்டால் மாணவர்கள் பெற்ற சீட்டுகளை இழக்காமலிருக்கத்தான் இந்த அறிவிப்பு என ரெட்டி கூறினார்.
ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் 4.5 உள் ஒதுக்கீடு மூலமாக 443 சீட்டுகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். இதில் சார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட 325 மாணவர்களுக்கு அனுமதி உறுதிச் செய்யப்பட்டது. ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோதும் கூட மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலும், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதும் இம்மாணவர்களுக்கு அனுமதி உறுதி என அறிவித்திருந்தனர்.
News@thoothu





0 comments: on "ஐ.ஐ.டி:கேள்விக் குறியாகும் 325 முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலம்!"
Post a Comment