தலைப்புச் செய்தி

Saturday, March 17, 2012

பட்ஜெட்:வாழ்க்கை சுமை அதிகரிக்கிறது!


புதுடெல்லி:நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
மொத்த செலவினம் ரூ. 14 லட்சத்து 90 ஆயிரத்து 925 கோடி. திட்டச் செலவுகள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 25 கோடி ரூபாய். திட்டமிடப்படாத செலவு தொகை ரூ. 9 லட்சத்து 69 ஆயிரத்து 900 கோடி. அரசின் மொத்த வரி வருமானம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 612 கோடியாக இருக்கும் என  மதிப்பீடு. இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 3 லட்சத்து 13 ஆயிரத்து 313 கோடி.
சேவை வரி 2% அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும்.49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்டும் வகையில், உற்பத்தி மற்றும் சேவை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வருமான வரி விலக்கு வரம்பை நம்பியிருந்த மக்களுக்கு குறைந்த அளவே வரி விலக்கு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தரும். தற்பொழுது 1.80 லட்சமாக வரி விலக்கு உள்ளது. பட்ஜெட்டில் வெறும் 20 ஆயிரம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான (60 முதல் 80 வயது வரையிலான குடிமக்கள்) வருமான வரி விலக்கு உச்சவரம்பு  ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டுதல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், சுகாதாரம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு (உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் அதிகம் பேசப்பட்டது) 2012-13 நிதியாண்டுக்கு ரூ.20,822 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.4,000 கோடி (முந்தைய ஆண்டில் ரூ.3,000 கோடி) ஒதுக்கீடு செய்திருப்பதுடன், இத்திட்ட முகமைகள் தங்களுக்குத் தேவைப்படும் நிதியை வெளியில் கடனாகப் பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கு நிகழாண்டில் ரூ.14,000 கோடி ஒதுக்கீடு ( முந்தைய ஆண்டில் ரூ.11,000 கோடி) செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவை எந்த அளவுக்கு பலனை தரும் என்பது தெரியவில்லை.
உர விலையை குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், விவசாய கடன் தொகை ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொகையை பாக்கி இல்லாமல் செலுத்தும் விவசாயிக்கு கூடுதலாக 3 சதவீதம் மானிய சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஆறுதலான விஷயம்தான். ஆறுமாதங்களுக்குள் ஆதார் அட்டையின் மூலம் மானிய தொகை ரொக்கமாக வழங்கும் முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரணாப் அறிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக ரொக்கம் கொடுத்து தங்கம் வாங்கும் பொழுதும், வேளாண் நிலம் தவிர்த்து அசையா சொத்துக்கள் எதை வாங்கினாலும் அப்பொழுது வரி பிடித்தம்(டி.டி.எஸ்) செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுமாம். திருமணத்திற்காக நகைகள் வாங்குவோருக்கு மேலும் சுமையை அளிக்கும் விவகாரம் இது. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆனால் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறைவாகவே இருக்கும்.
மத்திய புலனாய்வுத்துறை(சி.பி.ஐ)க்கு, கடந்த ஆண்டு, 344.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில், வரும் நிதியாண்டு 2012 – 2013க்கு, 395.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகைகளால், மொபைல் போன், எல்.சி.டி., எல்.இ.டி ‘டிவி’க்கள் விலை குறையும். வரி விதிப்பால், சிகரெட், பீடி, சைக்கிள் மற்றும் சோப்புகள் விலை உயரும். இதில் ஆறுதலான விஷயம் சிகரெட், பீடி விலை உயர்வு என்றாலும் எவ்வளவுதான் விலையை உயர்த்தினாலும் புகை பிடிப்போரின் எண்ணிக்கையை மட்டும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி., நோய்க்கான மருந்துகள், எல்.சி.டி., மற்றும் எல்.இ.டி., பேனல்கள், வீட்டு வசதி கூட்டுறவு சங்க கட்டணம் உள்ளிட்டவற்றின் விலை குறையும். திரைப்பட காப்புரிமை மற்றும் பதிவுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்கு இந்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
மொத்தத்தில் விலை வாசி உயர்வால் அவதிப்படும் சாதாரண மக்களுக்கு மேலும் சுமையை அளிப்பதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.


நியூஸ்@தூது 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பட்ஜெட்:வாழ்க்கை சுமை அதிகரிக்கிறது!"

Post a Comment