சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால், முதலில் எதிர்த்தரப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என சிரியா அரசு கூறியுள்ளது.
எகிப்து புரட்சியைத் தொடர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில மாதங்கள் அமைதி வழியில் சென்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், இராணுவ அடக்குமுறையால் ஆயுதப் போராட்டமாக மாறின.
இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற வீரர்கள் சிரியா விடுதலை ராணுவம் என்ற பெயரில், ஜனாதிபதி இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். புரட்சி தொடங்கி ஓராண்டு முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் சமீபத்தில் தான் எதிர்க்கட்சிகள் நினைவு ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
இந்நிலையில் சிரியாவில் உடனடியாக சண்டையை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட, சர்வதேச குழு ஒன்றை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக, ஐ.நா - அரபு லீகின் சிறப்பு பிரதிநிதி கோபி அனன் ஒரு குழுவை இன்று சிரியா அனுப்பி வைப்பதாக நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இக்குழு தனது பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையும் பட்சத்தில் தான் டமாஸ்கஸ் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் சண்டை உடனடியாக நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப சிரியா வகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சிரியா அரசு தான் முதலில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் வலியுறுத்த இரு தரப்புமே சண்டையை நிறுத்த வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தி வருகிறது.
கோபி அனனுக்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு சிரியா அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், எதிர்த்தரப்பு முதலில் ஆயுதங்களைக் கீழே போடுவது குறித்து சிரியா அரசுக்கு கோபி அனன் உறுதியளிக்க வேண்டும். அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: on "எதிர்த்தரப்பினரை முதலில் ஆயுதங்களை கீழே போடச் சொல்லுங்கள்: ஐ.நா பிரதிநிதிக்கு சிரியா கடிதம்"
Post a Comment