கடந்த 1988ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுமின் உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா, ரஷ்யா இடையே கையெழுத்தானது.
அதன் அடிப்படையில், இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு இந்திய அணுமின் கழகத்தால் தொடங்கப்பட்டது.
முதல் அணுமின் உலையின் பணிகள் 99.5 சதவீதமும், இரண்டாவது அணுமின் உலையின் பணிகள் 93 சதவீதமும் முடிவு பெற்றிருந்த நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து சில வதந்திகளை எழுப்பி, அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதையடுத்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அந்த பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வது என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 15 உறுப்பினர் கொண்ட ஒரு வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த வல்லுனர் குழு, கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது தான் என்று அறிக்கையையும் அளித்தது.
இந்நிலையில், தமிழக அரசும் ஒரு வல்லுனர் குழுவை கடந்த மாதம் 9ம் திகதி நியமித்தது. இந்த குழு, கூடங்குளம் பகுதிக்கு சென்று அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை சந்தித்து, மக்கள் மத்தியிலே நிலவி வரும் எண்ணங்களையும், அச்ச உணர்வுகளையும் கேட்டு அறிந்தது.
அதன் அடிப்படையில், அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும், ஓர் அறிக்கை தயார் செய்து 28.2.2012 அன்று தமிழ்நாடு முதல்வரிடம் அளித்தது.
அறிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் பகுதியில் மீண்டும் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எந்நேரத்திலும் அசாம்பாவிதங்கள் ஏற்படும் என்று கருதியுள்ள காவல்துறை, அப்பகுதியில் போலீஸ்களை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைத்துள்ளது.
நேற்று கூடங்குளம் பகுதியில் 197 பேரை
போலீஸ் கைது செய்துள்ளனர்.
|
0 comments: on "அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 197பேர் கைது: கூடங்குளத்தில் பதற்றம்"
Post a Comment