புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டும் என கோரி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த வேளையில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தை தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வேளையில், இவ்வழக்கு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பான பிரசித்திப்பெற்ற வழக்காகும் என அரசு சோலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்த பொழுது நீதிபதிகள் இந்த பாரபட்சமான கருத்தை வெளியிட்டனர். பின்னர் இவ்வழக்கு வருகிற மார்ச் மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கு பிரபலமாகும் அளவுக்கு என்ன உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது ஒரு சம்பவம் மட்டுமே.தொடர்புடைய கட்சிதாரர்கள் நீதிமன்றத்தில் உள்ளனர். இது பிரசித்திப் பெற்றதோ, இகழ்ச்சிக்குரியதோ அல்ல. இவ்வழக்கில் சில கட்சிதாரர்கள் தங்களுடைய பதிலை பதிவுச்செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
க்ரிமினல் சதித்திட்டத்தை மறுவிசாரணைச் செய்யாமலிருக்க காரணம் ஏதேனும் இருந்தால் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கு முன்பு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க அத்வானி உள்ளிட்டவர்களிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாப்ரி மஸ்ஜித் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீக்கிய கீழ்நீதிமன்ற தீர்ப்பை 2010 மே மாதம் 21-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதிச்செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான இதரக் குற்றங்கள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் உத்தரபிரதேச முதல்வராக பதவி வகித்த கல்யாண்சிங், சங்க்பரிவார தலைவர்களான எல்.கே.அத்வானி, பால்தாக்கரே, உமாபாரதி, சதீஷ் ப்ரதான், சி.ஆர்.பன்சால், முரளிமனோகர் ஜோஷி, வினய்கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, டி.ஹெச்.டால்மியா, மஹந்த் அவைத்யநாத், ஆர்.வி.வேதாந்தி, பரமஹம்ஸ் ராமச்சந்திரதாஸ், ஜகதீஷ் முன்னி மகராஜ், பி.எல்.சர்மா, நித்ய கோபால்தாஸ், தர்மதாஸ், சதீஷ் கர், மொரேஷ்வார் ஸாவே ஆகியோர் மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
0 comments: on "பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமாம்! – உச்சநீதிமன்றம் கூறுகிறது"
Post a Comment