ஜெய்ப்பூர்:ஜனநாயக போராட்டங்கள் நடைபெறும் அரபு நாடுகளிலும், மேற்காசியாவில் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாழும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
அந்த நாடுகளின் ஆட்சியாளர்களிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது என தெரிவித்த மன்மோகன்சிங் அவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்வார்கள் என நம்புவதாக கூறினார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த பத்தாவது ஆண்டு ‘பிரவாசி பாரதிய திவஸ்’ (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது; ‘வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிய பிறகு அவர்களுக்குப் பொருளாதார பாதுகாப்பைத் தரும் வகையில் ஓய்வூதியமும் அவர்களுடைய ஆயுளுக்குக் காப்பீடு அளிக்கும் திட்டமும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்டுவிட்டது.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால்கூட அவர்களுடைய குடும்பங்கள் தவிக்காமல் இருக்க இந்த திட்டம் உதவும் என்றார்.
இந்த திட்டப்படி அயல்நாடு வாழ் இந்தியத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.1,000 தொடங்கி ரூ.10,000 வரையிலான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம். ஒவ்வொரு தொழிலாளருக்கும் அரசு ஆண்டுதோறும் ரூ.1,000 தனது பங்காகச் செலுத்தும். பெண்களாக இருந்தால் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,000 அரசால் செலுத்தப்படும் என்றார்.
வாக்குரிமை:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதை மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். இதற்காக இந்திய அரசின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளின் குடிமக்களாக உரிமை பெற்றுவிட்டவர்கள் ஆகியோரை இணைக்கவும் அவர்களுடைய நலனுக்கென நடவடிக்கைகளைத் தொடங்கவும் அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது என்றார்.
வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்க்க கணினி உதவியுடன் குறைதீர் வழிமுறைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களுக்கு வேலை தந்து புரவலர்களாக இருப்போர், வேலை தருவோர், இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்த ஏற்பாட்டின் மூலம் இணைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் தகவல்களும் உதவிகளும் கிடைக்க வழியேற்படுத்தப்படும் என்றார்.
மனிதவள கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள் – பொறியாளர்கள் போன்ற சுய தொழில்வாணர்கள் ஆகியோரின் நலன்களும் காக்கப்படும்; இதற்காக நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் இந்தியா இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார் மன்மோகன் சிங்
0 comments: on "வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பில் பிரதமர் கவலை"
Post a Comment