லக்னோ: தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து உ.பி. மாநில அரசு அதிகாரிகள், லக்னோ உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் யானைச் சிலைகளை துணியைப் போட்டு மூட ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் துணிகளால் சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. இன்றைக்குள் லக்னோவில் உள்ள அனைத்து சிலைகளையும் மூடி விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல நோய்டாவில் உள்ள சிலைகளும் மூடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து லக்னோ மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் சாகர் கூறுகையில், தேர்தல் ஆணைய உத்தரவு எனது கைக்கு வந்துள்ளது. இதையடுத்து சிலைகளை மூடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. திங்கள்கிழமைக்குள் இந்தப் பணி முழுமை பெறும் என்றார்.
லக்னோ கோம்தி நகரில் உள்ள சமாஜிக் பரிவர்த்தன் ஸ்தலத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானையின் சிலைகள் அனைத்தும் துணிகளால் மூடப்பட்டுள்ளன. ஆனால் துணியைப் போட்டு மூடிய சில நிமிடங்களிலேயே அதை கிழித்தெறிந்து விட்டனர் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள்.
டெல்லி புறநகரில் உள்ள நோய்டா நினைவுப் பூங்காவிலும் அனைத்துச் சிலைகளும் மூடப்பட்டுள்ளன. பயங்கர பரபரப்புடன் பெரும் ஆரவாரத்துடன், ஆடம்பரமாக கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் இந்த பூங்காவைத் திறந்து வைத்தார் மாயாவதி என்பது நினைவிருக்கலாம்.
இங்கு கன்ஷிராம், அம்பேத்கர் ஆகியோரது சிலைகள் உள்ளன. அதேபோல மாயாவதிக்கு கிட்டத்தட்ட 24 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
0 comments: on "தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மாயா சிலைகளை துணி"
Post a Comment