தலைப்புச் செய்தி

Thursday, January 26, 2012

போலி என்கவுண்டர்கள் விசாரணை: மோடிக்கு ........


இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2003 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.


கடந்த 2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த பல்வேறு என்கவுண்டர்கள் போலியானவை என்று புகார்கள் குவிந்துள்ளன. குறிப்பாக 20 என்கவுண்டர்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை குறித்துத்தான் ஷா தலைமையிலான விசாரணை அமைப்பு விசாரணை மேற்கொள்ள உள்ளது.


நீதிபதி ஷா தலைமையிலான அமைப்பு, தனக்கு தேவையான விசாரணைக் குழுக்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுக்களில் இடம் பெறுவோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களா என்பதையும் நீதிபதி ஷாவே முடிவு செய்து கொள்ளலாம்.


நீதிபதி ஷா தலைமையிலான அமைப்பு 20க்கும் மேற்பட்ட என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து அவை உண்மையான என்கவுண்டரா அல்லது போலி என்கவுண்டரா என்பதை தெளிவுபடுத்தி அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தனது முதல் விசாரணை அறிக்கையை 3 மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் போலி என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரபல கவிஞர் ஜாவீத் அக்தரும், பத்திரிகையாளர் பிஜி.வர்கீஸும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.


போலி என்கவுன்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்த 2011ல் நீதிபதி ஷாவை குஜராத் அரசு நியமித்திருந்தது. இந்த வழக்குகளை சிறப்பு அதிரடிப் படை விசாரித்து வருகிறது.


சோரபுதீன், அவரது மனைவி கெளஸர்பி, துள்சிராம் பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் உள்ளிட்ட வழக்குகள் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் பிரபலமானவை.


இந்த என்கவுன்ட்டர்களில் குஜராத் மாநில உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சோரபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "போலி என்கவுண்டர்கள் விசாரணை: மோடிக்கு ........"

Post a Comment