டெல்லி:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரும் கேரள அரசின் கோரிக்கையை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு நேற்று(செவ்வாய்க்கிழமை) நிராகரித்துவிட்டது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து தமிழக, கேரள அரசுகளின் வாதங்களும் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
அதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் குழுவின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த், தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசின் சார்பில் கே.டி.தாமஸ், சி.டி. தத்தே, மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நீதிபதி கே.டி.தாமஸ் கூறியதாவது:
நிபுணர் குழு அறிக்கை விவரங்களை வெளிப்படுத்த முடியாது. அது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி 24, 25-ம் தேதி நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
புதிய அணையைக் கட்டினால் அதை நிர்வகிப்பது குறித்து இரு மாநில அரசுகளும் அளிக்கும் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து ஆலோசித்து இறுதி அறிக்கையை தயாரிப்பது எனவும், இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது என்று கே.டி. தாமஸ் தெரிவித்தார்.
நிபுணர் குழு அறிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் அணைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அணை வலுவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
“1979-ஆம் ஆண்டிலிருந்தே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உள்ளது. கடந்த மாதம் அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவினர், நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
2010-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் “அணையின் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.” என்று கூறியுள்ளது. எனவே, அணையின் நீர் அளவை 120 அடியாகக் குறைக்க முடியாது என்று நீதிபதி ஆனந்த் குழு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவைக் குறைக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நவம்பர் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
News@thoothu





0 comments: on "முல்லைப்பெரியாறு:அணையின் நீர்மட்டத்தை குறைக்கும் கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு"
Post a Comment