ஜெய்ப்பூர்:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தடைச் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற மிகவும் மோசமாக எழுதப்பட்ட நூலை ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா நிகழ்ச்சியில் வாசித்தது குறித்து எழுத்தாளர்களிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கியது.
இலக்கிய திருவிழாவில் ருஷ்டி பங்கேற்கவில்லை என்பது உறுதியானவுடன் எழுத்தாளர்களில் ஒரு பிரிவினர் அந்நூலில் இருந்து சில பகுதிகளை தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வாசித்தனர்.
கொலை மிரட்டல் நிலவுவதால் தான் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்கமாட்டேன் என வெள்ளிக்கிழமை ருஷ்டி அறிவித்தார். அவரது அறிவிப்பு எழுத்தாளர்களில் ஒரு பிரிவினருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. நூலை வாசித்த எழுத்தாளர்களை உடனடியாக விழா அமைப்பாளர்கள் தடுத்துவிட்டனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து வாசித்துள்ளனர்.
இதுக்குறித்து அமைப்பாளர்கள் கூறுகையில், “நாங்கள் அவர்களை தடுத்த பிறகும் அவர்கள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. வாசித்த அந்த எழுத்தாளர்களே காரணம்” என கூறியுள்ளனர். அதேவேளையில், ருஷ்டியின் மோசமான நூலின் பக்கங்களை வாசித்த எழுத்தாளர்கள் ஹரி குன்ஸ்ரு, அமிதாவ குமார், ஜீத் தய்யில், ரிஷீர் ஜோஷி ஆகியோருக்கு ஆதரவாக எழுத்தாளர் எஸ்.ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார். அமைப்பாளர்களின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
‘எல்லோருக்கும் சுதந்திரமாக உரை நிகழ்த்த உரிமை இருந்தாலும், ஒரு சமூகத்தின் உணர்வுகளை தூண்டுவதையும், சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வெளியிடுவதையும் தவிர்ப்பதுதான் நல்லது’ என பிரபல கேரள கவிஞர் கெ.சச்சிதானந்தன் கூறியுள்ளார்.
அதேவேளையில், ருஷ்டியின் சர்ச்சைக்குரிய நூலின் பக்கங்களை இலக்கிய திருவிழாவில் வாசித்த வீடியோ காட்சிகளை ஜெய்ப்பூர் போலீஸார் விழா அமைப்பாளர்களிடம் கேட்டுள்ளனர். வீடியோ காட்சிகளை ஆராய்ந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கூறியுள்ளது.
News@thoothu





0 comments: on "இலக்கிய திருவிழாவில் வாசிக்கப்பட்ட ருஷ்டியின் சர்ச்சைக்குரிய நூல்"
Post a Comment