தலைப்புச் செய்தி

Thursday, January 5, 2012

மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்


ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.
இந்த பயிற்சியின் போது தரையில் இருந்து கடலில் உள்ள இலக்கைத் தாக்கும் காதர் ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் நாசர் ஏவுகணை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நூர் ஏவுகணை ஆகிய மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக ஈரான் அறிவித்தது. அதேபோல் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருள் கம்பிகளையும், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தயாரித்து விட்டதாகத் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் பயிற்சி மேற்கொள்வதாக தெரியவந்தவுடன் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் சி.ஸ்டென்னிஸ் என்ற போர் விமானந்தாங்கிக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவுக்குச் சென்று விட்டது.
பஹ்ரைன் நாட்டில் அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. அங்கிருந்தபடி வாரம் அல்லது மாதம் என்ற சுழற்சி முறையில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பல் ரோந்து மேற்கொள்வது வழக்கம். அதன் படி தான் ஸ்டென்னிஸ் போர்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது.
ஈரான் கடற்படை தனது 10 நாட்கள் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரி அடாவுல்லா சலேஹி நேற்று விடுத்த அறிக்கையில், இந்த பயிற்சி காரணமாகத் தான் அமெரிக்க கப்பல் நீரிணையைக் கடந்து சென்றது. இனிமேல் அந்தக் கப்பல் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஈரான் அறிவுரை, பரிந்துரை மற்றும் எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து ஈரான் எச்சரிக்கை விடுக்காது என்றார்.
இதற்கிடையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைப் போல, ஐரோப்பிய யூனியனும் இம்மாத இறுதிக்குள் விதிக்க வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது. இம்மாதம் 30ம் திகதி ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாடு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஏவுகணைகள் பரிசோதனை முடிந்துவிட்ட நிலையில் முதன் முறையாக ரஷ்யா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாடிம் கோவல் நேற்று அளித்த பேட்டியில்,ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் கிடையாது. இனி அதுபோன்ற ஏவுகணைகளை அந்நாடு எப்போதும் தயாரிக்கப் போவதுமில்லை என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்"

Post a Comment