தலைப்புச் செய்தி

Wednesday, January 4, 2012

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கான் - முஷாரப் கட்சி கூட்டணி


பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான்கான் கட்சியும், அந்நாட்டு முன்னாள் இராணுவ சர்வாதிகாரி முஷாரப் கட்சியும் கூட்டணி அமைக்கக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் முக்கிய எதிர்கட்சியாக முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான்கான் தலைமையிலான தகரிக் இ இன்சாப் கட்சி அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கட்சி நடத்திய சுனாமி நினைவு தின மெகா பேரணியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இவரது கட்சியில் சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த ஷா முகமது குரேஷி, பாகிஸ்தான் மக்கள் கட்சியிலிருந்து விலகி இம்ரான் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இம்ரான்கானின் தகரிக் இ இன்சாப் கட்சியின் புதிய துணைத்தலைவரான ஷாமுகமது குரேஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது பாகிஸ்தான் அரசியலில் ‌‌மெமோகேட் விவகாரம் பரபரப்பினை உண்டாகியுள்ளது. இதனால் அரசுக்கும் இராணுவத்திற்கும் மோதல் வெடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு விரைவில் முன்கூட்டியே தேர்தல் நடக்கலாம்.
இந்நேரத்தில் எங்களது தக்ரிக் இ இன்சாப் கட்சியில் கூட்டணி வைக்க மேலும் சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. முஷராப் கட்சியுடன் உரிய நேரத்தில் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே வரும் 8ம் திகதி முஷராப் நாடு திரும்ப உள்ளதாகவும், கராச்சி நகரில் தனது கட்சி சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாகவும் முஷராப் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கான் - முஷாரப் கட்சி கூட்டணி"

Post a Comment