தலைப்புச் செய்தி

Tuesday, January 3, 2012

முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை: ஐவர் குழு


நிலநடுக்கம் ஏற்பட்டால் முல்லை பெரியாறு அணை உடைந்து இலட்சக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கிவிடுவார்கள் என்று சரடு விட்டுவந்த கேரளாவின் வாதம் மீண்டும் தவிடு பொடியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் முல்லை பெரியாறு அணைக்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று பொட்டிலடித்தாற்போல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது.

கேரள அரசின் புகாரைத் தொடர்ந்து சமீபத்தில் தத்தே, தத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த ஐவர் குழு அணைக்கு நேரடியாக அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது கேரளத் தரப்பின் வாததிற்கு வலுவூட்டும் வகையில் செயல்பட கேரள அதிகாரிகள் வலியுறுத்தியதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர். அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சொற்ப அளவிலேயே ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இரண்டு நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அப்போது வழக்குரைஞர்கள் வாதம் எதுவும் இடம் பெறாது. அறிக்கை ஆய்வுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை: ஐவர் குழு"

Post a Comment