தலைப்புச் செய்தி

Tuesday, January 3, 2012

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!


பலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (31.12.2011) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் அல் கலீல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 28 பலஸ்தீனர்கள் இப்பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புப் படையால் அடாவடியாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் ரமல்லா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர். அதில் ஒருவர் 52 வயது மூதாட்டியாவார். 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட 15 சிறுவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திடீர் திடீரெனக் கைதுசெய்யப்படும் பலஸ்தீன் பொதுமக்கள் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் வருடக்கணக்கில் தடுப்பு முகாம்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைத்துவைக்கப்படும் அவலம் முடிவின்றித் தொடர்வதாக அங்கலாய்க்கும் பலஸ்தீனர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.





Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!"

Post a Comment