தலைப்புச் செய்தி

Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை


புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பரப்பி வரும் உண்மைக்கு மாறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இதைபோல் முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை 120 அடியாகக் குறைக்க உத்தரவிட வேண்டும். அதை தமிழக அரசு செய்யவில்லை என்றால் நீர் அளவைக் குறைத்துக் கொள்ள கேரள அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதுமட்டும் இன்றி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வலியுறுத்தி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் வசிக்கும் 19 பேர் சேர்ந்து தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் திங்கள்கிழமை தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சந்திர மௌலி கே.ஆர். பிரசாத், அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன. இதில் தமிழக, கேரள அரசு வழக்குரைஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்தாதவாறு கேரள அரசு அதன் சட்டப் பேரவையில் அணைப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாதபடி கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
நியூஸ்@

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முல்லைப் பெரியாறு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை"

Post a Comment