தலைப்புச் செய்தி

Monday, December 5, 2011

24 பாக். வீரர்கள் பலியான நேட்டோ தாக்குதல் திட்டமிட்ட ஒன்றா ?


இஸ்லாமாபாத் : கடந்த சனிக்கிழமை அன்று நேட்டோ படைகள் பாகிஸ்தான் ராணுவ செக் போஸ்டுகளின் மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் வீடியோ விபரங்களை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்ட பாகிஸ்தான் அரசு அத்தாக்குதல் தற்செயலான விபத்து அல்ல என்று பரபரப்பான தகவலை கூறியுள்ளது.
இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி இத்தாக்குதல் விபத்து அல்ல என்றும் வெறும் மன்னிப்பை ஏற்க மாட்டோம் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் பாகிஸ்தானின் வீரர்கள் இனியும் கூட்டணி படையினரால் சுட்டு கொல்லப்படுவதை பொறுத்து கொள்ள மாட்டோம் என்றார். மேலும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பணியாற்றும் கூட்டணி படையினருக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே எல்லையில் படை நகர்த்தல் சம்பந்தமாக தெளிவான வரையறுக்கப்பட்ட திட்டம் இருந்தும் இத்தாக்குதல் குறித்து தாக்குதலில் ஈடுபட்ட விமானங்களின் புறப்பாடு குறித்தோ எச்செய்தியும் பரிமாறி கொள்ளப்படவில்லை என்றார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ திட்டங்களுக்கான இயக்குநர் மேஜர் ஜெனரல் இஷ்பாக் நதீம் துருப்புகளின் நடமாட்டத்தை குறித்து தகவல் பரிமாறி கொள்ள நான்கு தொலைதொடர்பு மையங்கள் வைக்கப்பட்டும் எல்லாவித விதிமுறைகளும் மீறப்பட்டு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என்றார். இத்தாக்குதலுக்கு முன்னமேயே 2008, 2010 மற்றும் 2011 ல் மூன்று பெரிய தாக்குதல்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் மேல் தொடுக்கப்பட்டு 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.

மேலும் பல முறை அத்தாக்குதல் குறித்த விபரங்கள் கோரப்பட்டும் இது வரை அவை பாகிஸ்தான் அரசுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் அப்படி கொடுக்கப்பட்டாலும் அவை முழுமையானதாக இல்லை என்றும் இஷ்பாக் நதீம் கூறினார். தாக்குதல் நடந்த அன்றும் துருப்பு நடமாட்டம் குறித்து எவ்வித தகவல் பரிமாற்றம் இல்லாதது, கண்மூடித்தனமாக பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் தொடர்பை துண்டித்தது போன்றவையும் இதற்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களும் இத்தாக்குதல் ஒரு தற்செயலான விபத்து அல்ல என்றே நம்புவதற்கு இடமளிப்பதாகவும் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "24 பாக். வீரர்கள் பலியான நேட்டோ தாக்குதல் திட்டமிட்ட ஒன்றா ?"

Post a Comment