தமிழ்நாட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அவர்களை பணி நீக்கம் செய்தது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தமிழ்நாட்டில், கடந்த 1990-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்ட்டார்கள்.
அதையடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அவர்களைப் பணி நீக்கம் செய்தது.
அதைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களை பணி நியமனம் செய்வதும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீக்குவதுமாக நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தன.
இந்நிலையில், கடந்த 2006-ல் திமுக அரசால் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை, சமீபத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
0 comments: on "மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை"
Post a Comment