அமெரிக்க அரசு 17 பெரும் வங்கிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. எதற்காகவாம்? 2007-ல் அமெரிக்காவில் தோன்றி முழு உலகையும் சுழற்றியடித்த பொருளாதார நெருக்கடி நினைவிருக்கிறதா? அந்தப் பிரச்னையின் மூலகாரணமாக இருந்தது இந்த வங்கிகள் விற்ற கடன் பத்திரங்கள்தான் என அமெரிக்க அரசிற்கு 'இப்போதுதான்' தெரிய வந்துள்ளது!
பேங் ஆஃப் அமெரிக்கா, கோல்ட்மேன் சாக்ஸ், சிடிகுரூப், ஜேபி மோர்கன்சேஸ் உள்ளிட்ட அமெரிக்க வங்கிகளும் எச்.எஸ்.பி.சி, பார்க்லேய்ஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளும் சுமார் 190 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை ஃபேன்னிமே, ஃப்ரெடிமேக் ஆகிய நிதி நிறுவனங்களுக்கு விற்றிருந்தன. அக்கடன் பத்திரங்களுள் பெரும்பான்மையானவை அமெரிக்க வீட்டுக் கடன்களை அடிப்படையாகக் கொண்டவை. வீட்டுவிலைகள் திடீரென அதாலபாதாளத்திற்குச் சரிந்த போது வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்கியிருந்தவர்கள் கலக்கமடைந்தார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்கள் நடுத்தர வருமானக் காரர்கள். கடன் தவணைகளைத் தொடர்ந்து செலுத்த முடியவில்லை என்பதால் வீடுகளை வங்கியிடமே ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள் அவர்கள். வங்கிகள் அந்த வீடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? சந்தையில் விற்றாலும் வாங்க ஆளில்லை. அப்படியே யாராவது வாங்க முன்வந்தாலும் அடிமாட்டு விலைதான் கிடைக்கும்!
இதில் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஃபேன்னிமே, ஃப்ரெடிமேக் ஆகியவை அரசு சார் நிறுவனங்கள் (Government Sponsored Enterprises). இவற்றிற்கு நேர்ந்த இழப்பை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பு அமெரிக்க அரசாங்கத்தின் தலையில் விழுந்தது. இந்த நட்டம் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதை அமெரிக்க அரசு இதுகாறும் ஆராய்ந்து இப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்துள்ளார்கள் போலிருக்கிறது. எனவேதான் இந்த வழக்கு!
மேற்படி கடன் பத்திரங்களை உருவாக்கி விற்றதில் சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏகப்பட்ட முறைகேடுகளையும் சட்ட மீறல்களையும் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திரும்பி வராது என்று தெரிந்தே கடன்களை வாரி வழங்கி, அவற்றை கடன் பத்திரங்களாக மாற்றி ஃபேன்னிமே, ஃப்ரெடிமேக் மட்டுமல்லாது பல வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் தலையிலும் கட்டி விட்டிருக்கிறார்கள் இவர்கள். பிரச்னை என்னவென்றால், 2007-ல் பொருளாதாரச் சரிவு ஏற்படுவதற்கு முன்பிருந்தே பல பொருளியல் வல்லுனர்கள் 'ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட இந்த பலூன் ஒரு நாளைக்கு வெடிக்கப் போகிறது' என்று காட்டுக்கத்தலாய்க் கத்திக் கொண்டிருந்ததை அமெரிக்க அரசு காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இப்போது காலங்கடந்த ஞானோதயம்!
சரி.. வழக்குப் போட்டாகி விட்டது. இனி என்ன நடக்கும்? அமெரிக்க அரசு இந்த வழக்குகள் அனைத்திலும் வென்றுவிட்டால் உலகப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பிவிடுமா என்றால், அதுதான் நடக்காது என்கிறார்கள் வல்லுனர்கள். உலகளாவிய பொருளாதார மந்தநிலையினால் ஏற்பட்ட நட்டத்திற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? என போர்க்கொடி தூக்குகின்றன சம்பந்தப்பட்ட வங்கிகள்! அவர்களின் வாதங்கள் எடுபடாமல் போய் அமெரிக்க அரசு கோரும் பல பில்லியன் டாலர்கள் அபராதத் தொகையை இந்த வங்கிகள் கட்ட நேர்ந்தால் அனைத்து வங்கிகளையும் மூடிவிட நேரும். அப்படி நேர்ந்தால் அமெரிக்க பொருளாதாரம் மீள முடியாத நிலைக்குச் சென்று விடும்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் அமெரிக்க அரசு! இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்!
0 comments: on " "
Post a Comment