லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபியின் அதிகாரம் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது தலைநகர் திரிபோலி புரட்சிப்படையின் கையில் உள்ளது.
அதை தொடர்ந்து அதிபர் கடாபி தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் புரட்சிப்படை வீரர்கள் தீவிரமாக உள்ளனர். அவர் தனது சொந்த ஊரான சிர்த் நகருக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், அவர் திரிபோலி நகருக்குள்தான் பதுங்கி இருக்கிறார் என புரட்சிப்படை சந்தேகிக்கிறது. எனவே, அவர் மறைந்து இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுத்தாலோ, அவரை கொன்றாலோ ரூ.8 கோடி பரிசளிக்கப்படும் என புரட்சிப்படை அறிவித்துள்ளது. இருந்தும் கடாபி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
திரிபோலி தவிர சிர்த் நகரிலும், அவரது மாளிகை அமைந்துள்ள பாப் அல்-அஷிசியாவிலும் தேடி வருகின்றனர்.கடாபியை தேடும் பணியில் புரட்சிப்படைக்கு “நேட்டோ” படையும் உதவி செய்து வருகின்றது. இது குறித்து இங்கிலாந்து ராணுவ மந்திரி ஷியாம்பாஸ் கூறும் போது,
கடாபியை புரட்சி படையுடன் சேர்ந்து நேட்டோ படையும் தேடி வருகிறது என தெரிவித்துள்ளார். ஆனால் இதை மேற்கத்திய கூட்டணி நாடுகள் மறுத்துள்ளன. இருந்தாலும், இங்கிலாந்து படையுடன் சேர்ந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களும் கடாபியை தேடி வருகின்றன.
இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர் புரட்சி படையினருக்கு வழி காட்டியாக முன்னேறி செல் கின்றனர்.அவர்கள் புரட்சிப்படையினர் போன்று அரேபியர்களின் உடை அணிந்துள்ளனர். கடாபி பதுங்கி இருக்கும் இடத்தை சல்லடை போட்டு தேடுகின்றனர். கடாபி உயிருடன் பிடிபடும் பட்சத்தில் அவரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர, இருப்பதாக புரட்சிப்படையின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடன், அவரது மகன்கள் சயீப் அல்-இஸ்லாம், உளவுத்துறை அதிகாரி அப்துல்லா அல்-செனுஸ்சி ஆகியோரையும் சர்வதேச கோர்ட்டில் நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.
திரிபோலி புரட்சிப்படை வசமானதும் கடாபியின் மகன் அல்-சாதிக்கின் மாளிகையும், சானாவில் உள்ள மகள் ஆயிஷாவின் ஆடம்பர மாளிகையும் கொள்ளை அடிக்கப்பட்டது. அங்கிருந்த ஆடம்பர பொருட்கள் திருடிச்செல்லப்பட்டன.
கடாபியின் ரூ.3,670 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. அவற்றை விடுவிக்க ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பணத்தின் மூலம் லிபியாவை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments: on "தலைமறைவாக இருக்கும் கடாபியை புரட்சிப்படை தேடுகிறது:"
Post a Comment