தலைப்புச் செய்தி

Tuesday, August 16, 2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களுடன் இன்று வகுப்புகள் தொடங்குகிறது


தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மாநில கல்வி வாரிய பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் தனித்தனியாக பாடத்திட்டம் இருந்தது. இந்த பாடத்திட்டதை ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர கடந்த அரசு முடிவு செய்து 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
 
ஆனால் அந்த பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்றும், அதில் மாற்றம் கொண்டு வந்து சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தற்போதைய அரசு தெரிவித்தது. இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்தும்படி உத்தரவிட்டது.
 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கும் பணி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
 
அன்று முதல் தொடர்ந்து சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
 
அந்த பாடப்புத்தகங்களில் செம்மொழி மாநாடு பற்றிய செய்திகள், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்பான வரிகள் உள்ளிட்ட பல பக்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், சில பக்கங்கள் கறுப்பு மையால் அடிக்கப்படவேண்டும் என்றும் தனி அறிவுரை அடங்கிய ஒரு குறிப்பேடு அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
 
அந்த குறிப்பேட்டில் உள்ளபடி ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் நீக்கவேண்டியதை நீக்கியும், ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் உள்ளனர். இந்த பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. பெரும்பாலான பள்ளிகளில் இந்த பணி முடிந்துவிட்டது. 
 
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் இன்றுதான் வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அந்த புத்தகங்களை பார்த்து ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்குவார்கள். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பல பள்ளிகள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை வாங்கி உள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களுடன் இன்று வகுப்புகள் தொடங்குகிறது"

Post a Comment