தலைப்புச் செய்தி

Saturday, August 27, 2011

சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் மனு


புதுடெல்லி:சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதித்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் நடத்தும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள மேற்கண்ட மாநிலங்களுக்கு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அளித்த மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான மக்களின் அடிப்படை உரிமை அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்களின் மனதில் தேசப்பற்றையும், ஜனநாயக மதசார்பற்ற இந்தியா என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் இதர அமைப்புகளைப் போலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பில் பங்கேற்கவும், அதனை காணவும் வருகை தருகின்றனர். அமைதியாகத்தான் அணிவகுப்பு  எல்லா வருடங்களும் நடத்தப்படுகிறது என போலீஸ் பதிவேடுகளிலும், ஊடக செய்திகளிலிருந்தும் நிரூபணமாகிறது.
இவ்வளவு காலமாக அணிவகுப்பு தொடர்பாக எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஏதேனும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகள் பதிவுச் செய்யப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக போலீசிலும், இம்மாநிலங்களின் ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினரும் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை தடைச்செய்ய முயலுகின்றனர்.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் சுதந்திர தின அணிவகுப்பு மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள் கூட நடத்துவதற்கு அனுமதியை மறுத்துள்ளன. ஒவ்வொரு அமைப்புகளும் தனித்தனியாக சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்துவது சட்ட-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் என கூறி இத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அன்றைய தினம் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை.
பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆளும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில் பாரபட்சத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இவ்வாறு இ.அப்துற்றஹ்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களின் உரிமைகளை மறுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தலையிட வேண்டும் எனக்கோரி அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனையும் பாப்புலர் ஃப்ரண்ட் குழு சந்தித்து மனு அளித்துள்ளது.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் மனு"

Post a Comment