தலைப்புச் செய்தி

Tuesday, August 9, 2011

அயோத்தி - அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 மனுக்கள் தாக்கல்!


அயோத்தியில் பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மேலும் 2 மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், ஏற்கனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, பா.ஜ.க. ஆட்சியின் போது, கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் சிறிய அளவிலான ராமர் கோவில் உருவாக்கப்பட்டது.

இதன் பின் 1993-ம் ஆண்டு "அயோத்தி சட்டத்தை" நிறைவேற்றி, பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும், அதையொட்டி இருக்கும் 67 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் முக்கிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இந்துக்கள், முஸ்லிம்கள், நிர்மோகி அக்ஹாரா ஆகியோர் பிரச்சினைக்குரிய நிலத்தை, சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நிர்மோகி அக்ஹாரா, அகில் பாரத் இந்து மகாசபா, ஜமாத் உலமா-இ-ஹிந்த், சன்னி சென்டரல் வக்ப் போர்டு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அதற்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்று, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம்தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் திங்கள் கிழமையன்று இந்த வழக்கில் மேலும் 2 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அகில் பாரதீய ஸ்ரீராம் ஜென்மபூமி சமதி, பரூக் அகமது ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்களில், பிரச்சினைக்குரிய நிலத்தை பிரித்து தாருங்கள்'' என்று எந்த தரப்பும் கேட்காத பட்சத்தில், அந்த நிலத்தை உயர் நீதிமன்றம் பிரித்து கொடுத்து இருப்பது வினோதமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோகத் ஆகியோர் ஏற்றுக்கொண்டு ``இந்த இரு மனுக்களும், ஏற்கனவே உள்ள மெயின் வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும்'' என்று அறிவித்தனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அயோத்தி - அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 மனுக்கள் தாக்கல்!"

Post a Comment