தலைப்புச் செய்தி

Tuesday, August 9, 2011

போலி என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாரை தூக்கிலிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

போலி என்கவுண்டரில் ஈடுபடும் காவலர்களைத் தூக்கில் போட வேண்டும். சட்டத்தின் பாதுகாவலர்களான காவலர்கள், கூலிப்படையினர் போல பொதுமக்களை தீர்த்துக் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், பல்வேறு குற்றச்செயல்களுக்காக தாராசிங் என்ற பிரபல ரவுடி தேடப்பட்டு வந்தான். அவனைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, அவன் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுதொடர்பாக, அவனுடைய மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவரை காவல்துறையினர் கடத்திச் சென்று கொடூரமாக கொன்று விட்டு, `என்கவுண்டர்' என்று கூறி விஷயத்தை முடித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதையடுத்து, அந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிலிருந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. அரவிந்த் ஜெயின், போலீஸ் சூப்பிரண்டு அர்ஷத் ஆகியோரை சி.பி.ஐ. முன்பு சரண் அடையுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் சரண் அடையாவிட்டால், அவர்களை கைது செய்யுமாறும் உத்தரவிட்டனர்.

மற்றொரு குற்றவாளியான முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் ரத்தோர் தலைமறைவாக இருப்பதாக சுசீலாதேவியின் வக்கீல் சுட்டிக் காட்டினார். அதற்கு நீதிபதிகள், `அவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். சட்டம் தனது கடமையை செய்யட்டும்' என்றனர்.

பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:-

சாதாரண மக்கள் செய்யும் குற்றங்களுக்கு சாதாரண தண்டனை தரலாம். காவலர்கள் செய்யும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தங்கள் கடமைக்கு முற்றிலும் விரோதமாக செயல்படுகிறார்கள்.

சட்டத்தின் பாதுகாவலர்களான காவலர்கள், மக்களைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கூலிப்படையினரைப் போல, பொதுமக்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

போலி என்கவுண்டர்கள் என்பது, மனித உணர்வே இல்லாமல் செய்யப்படும் கொடூர கொலைகள் அன்றி வேறில்லை. இத்தகைய கொலைகளை அரிதினும் அரிதான குற்றமாக கருத வேண்டும். எனவே, போலி என்கவுண்டரில் ஈடுபடும் காவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "போலி என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாரை தூக்கிலிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!"

Post a Comment