நடந்து முடிந்த 2011 கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது.
140 சட்டப்பேரவைகள் கொண்ட கேரள சட்டப்பேரவையில், வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு தெரியும் நேரம் வரை இரு கூட்டணிகளும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் கடும் போட்டியில் நின்றன. கேரள அரசியலில் இதுவரை இல்லாத அளவு முடிவின் இறுதி நிலையிலேயே ஆட்சி யாருக்கு என்பதை உறுதிபடுத்த முடிந்தது. வெறும் 4 தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.
கேரள அரசியல் பிற மாநில அரசியல்களைவிட சற்று மாறுபட்டது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு பெரும் கட்சிகளின் தலைமையில் பிற கட்சிகள் இணைந்து இரு கூட்டணி போட்டியே ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும்.
காங்கிரஸ் கூட்டணி 72 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி 68 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 38 தொகுதிகளே கிடைத்தன. கம்யூனிஸ்டுக்கு 47 தொகுதிகள் கிடைத்தது. காங்கிரஸ் கூட்டணியிலுள்ள முஸ்லிம் லீக் 24 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கேரள காங்கிரஸ் எம் 15 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சிகளின் துணையுடன் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் நிலையிலுள்ள காங்கிரஸுக்கு, வரும் ஆட்சி அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இரு கூட்டணிக்கும் மாற்று என்ற அறைகூவலுடன் ஒவ்வொரு முறையும் களமிறங்கும் பாஜகவுக்கு இம்முறையும் கேரளத்தில் கால் பதிக்க முடியவில்லை. எனினும் முந்தைய தேர்தல்களைத் தொடர்புபடுத்தினால், வாக்குகளின் எண்ணிக்கையை அது அதிகரித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜகோபால் போட்டியிட்ட நேமம் தொகுதி உட்பட மூன்று தொகுதிகளில் கடும் போட்டியினைக் கொடுத்த பாஜக, இவற்றில் இரண்டாம் இடத்துக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசியலில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என மாற்றி மாற்றி ஆட்சிப் பரிசினைக் கொடுக்கும் மக்கள், இம்முறையும் நடைமுறையை மாற்றாமல் காங்கிரஸுக்கு ஆட்சியினை வழங்கினாலும் இத்தேர்தலில் கம்யூனிஸ்ட் காங்கிரஸுக்கு மிகப் பெரும் சவாலாக நின்றதும் குறிப்பிடத்தக்கது.




0 comments: on "கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!"
Post a Comment