அயோத்தியில் ராமர்கோவில் - பாபர் மசூதி உள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவுகிறது. இந்து அமைப்புகளும், முஸ்லிம் சட்ட வாரியமும், சர்ச்சைக்குரிய இடம், தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வந்தன.
அலகாபாத் ஐகோர்ட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை 3 பங்கு வைத்து அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. முஸ்லிம் சட்டவாரியம், இந்து மகாசபை, நிர்மோகி அகாரா ஆகிய 3 அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் நிலம் பிரித்து கொடுக்கப்பட்டது.
அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்க 3 அமைப்புகளும் மறுத்தன. அந்த 3 அமைப்புகள் சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுதாக்கல் செய்யப்பட்டது. சன்னி வக்பு வாரியமும் அப்பீல் மனு செய்தது. இந்த 4 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதற்கான உத்தரவை பிறப்பித்து நீதிபதிகள் கூறியதாவது:-
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் மீது அலகாபாத் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை ஏற்க இயலாது. ஏனெனில் மனுதாரர்கள் யாரும் நிலத்தை பங்கீட்டு செய்து தருமாறு கேட்க வில்லை. இந்த நிலையில் நிலத்தை பங்கீட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தலாம்.
நிலத்தை பங்கு வைத்து அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. விந்தையாகவும் இருக்கிறது. எனவே அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிக்கப்படுகிறது. அங்கு தற்போதைய நிலை நீடிக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய 67 ஏக்கர் நிலத்தில் எந்தவித வழிபாடுகளும் நடைபெறக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் லோடா, அப்டாப் ஆலம் கூறி உள்ளனர்.





0 comments: on "பிரதி சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு? அயோத்தி தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை; தற்போதைய நிலை நீடிக்க உத்தரவு"
Post a Comment