மதுரை விமான நிலையத்தில் இருந்து மூன்று மாதங்களில் வெளிநாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மதுரையில் சுமார் 130 கோடியில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய முனையக் கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியது: மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 6 ஆண்டுகளில் நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக அக்கறை காட்டி வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தை எட்டியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக 8.5 சதவிகித வளர்ச்சியை எட்டியதால் சாலை, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விமானப் போக்குவரத்து என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமின்றி, அவசியத் துறையாக மாறியிருக்கிறது. ஒருகாலத்தில் பஸ் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்து பஸ் போக்குவரத்தை நீடித்ததுபோல், இன்றைக்கு விமானப் போக்குவரத்தும் அவசியமான துறையாக உள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் மதுரைக்கு சர்வதேச விமானங்கள் வரும். அதேபோல மதுரையிலிருந்து அயல்நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று நம்புகிறேன். இப்போது தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருச்சியிலிருந்துதான் சிங்கப்பூர், துபை போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. விரைவில் அவர்கள் மதுரையில் இருந்து செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மதுரையிலிருந்து சென்னை சென்றுதான் நாட்டில் உள்ள தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை மாறி மதுரையில் இருந்து நேரடியாக பிற நகரங்களுக்குச் செல்லும் வகையில் உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்துச் சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு சென்னை தலைநகரமாக அமைந்துவிட்டது. இருப்பினும் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற முடியும். ரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலைப் போக்குவரத்துடன் விமானப் போக்குவரத்தும் மேம்படும் நிலையில் இது சாத்தியமாகும் என்றார்
0 comments: on "மதுரையில் மூன்று மாதங்களில் வெளிநாட்டு விமான சேவை தொடங்கும் - ப.சிதம்பரம்"
Post a Comment