புதுடெல்லி,செப்.15:கஷ்மீரில் நிலவிவரும் மோதல் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு உரிய வழிமுறைகளைக்குறித்து ஆலோசிப்பதற்காக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
சிறப்பு ஆயுதச் சட்டத்தை கஷ்மீரின் சில பகுதிகளில் வாபஸ் பெறுவதற்கான பொதுக்கருத்தை அனைத்துக் கட்சியினரிடம் ஏற்படுத்துவது இந்தக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கூடுதலான சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதுக் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். சிறப்பு ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெறுவதுக் குறித்து கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கெ.அந்தோணி தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடுவதற்கு வாய்ப்புண்டு என செய்திகள் வெளியான பொழுதும் பிரதமர் அலுவலகம் தொடர்புடைய வட்டாரங்கள் இச்செய்தியினை மறுத்துள்ளன.
நேற்று முன்தினம் கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிப்பதற்கு கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை 3 மணிநேரம் விவாதித்த பொழுதும் முடிவெடுக்காமல் கலைந்தது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கஷ்மீரின் சில பகுதிகளில் சிறப்பு ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெறுவதில் உடன்பாடில்லை என பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ள சூழலில் இதுக்குறித்த பொதுக்கருத்து உருவாவது சாத்தியமல்ல என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆயுதச் சட்டத்தை வாபஸ்பெறுவது பாகிஸ்தானிற்கு முன்பு தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என பா.ஜ.க கூறுகிறது. அதேவேளையில், நாள்தோறும் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் கஷ்மீரில் ஏதாவது மாற்றம் செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய-மாநில அரசுகள் உள்ளன.
ஆயுதச்சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு ராணுவமும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments: on "கஷ்மீர் மோதல்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்"
Post a Comment