அமெரிக்காவின் பிரபல இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவு நாளான இன்று முஸ்லிம்களின் புனித வேதமான அல்குர்ஆனை எரிப்பேன் என்று எகத்தாளமாக அமெரிக்காவின் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் அறிவித்ததும், அதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து குர்ஆண் எதிர்ப்பை பாதிரியார் கைவிட்டதும் நாமெல்லாம் அறிந்த ஒன்றே.
புனித குர்ஆண் எரிப்பு அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் கடும் கண்டனத்தை ஏற்கனவே பதிவு செய்திருந்தார். அந்த வரிசையில் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் பாதிரியாரின் குர்ஆண் எரிப்பு அறிவிப்பை கண்டித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இத்தோடு நிறுத்தியிருந்தால் அவரை முஸ்லிம்கள் மட்டுமன்றி, சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் நிச்சயம் பாராட்டியிருப்பர்.
ஆனால், அடுத்து அவர் சொன்ன செய்திதான் அவரது உள் நோக்கத்தை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது. அதாவது, இல்லாத காவி பயங்கரவாதம் என்று கூறி இந்துக்களின் மனதை புண்படுத்திய ப.சிதம்பரமும், குர்ஆனை எரிப்பேன் என்று சொன்ன டெர்ரி ஜோன்ஸும் உலக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்' என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
சிதம்பரம் அவர்கள் சொன்ன காவி பயங்கரவாதம் என்பது ஆதாரங்களின் அடிப்படையிலானது. மாலேகான் தொடங்கி தென்காசி வரை காவி பயங்கரவாதத்திற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. மேலும், ஒரு மதசார்பற்ற நாட்டின் உள்துறை அமைச்சராக உள்ள ஒருவர், ஒரு ஒரு மதத்தின் ஒரு சாராரை நோக்கி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது ஆதாரம் இல்லாமல் வைக்கமாட்டார்.
எனவே பொன்.ராதாகிருஷ்ணன் உண்மையாளர் என்றால், சிதம்பரம் அவர்களே! காவி பயங்கரவாதம் என்றீர்களே! அதற்கான சான்று என்ன என்று அறிவுப்பூர்வமாக வினவியிருக்கவேண்டும். அதைவிடுத்து, எந்தவித முகாந்திரமும் இன்றி முஸ்லிம்களின் உயிர்நாடியான குர்ஆனை எரிப்பேன் என்று காழ்புணர்வோடு சொன்ன பாதிரியின் கூற்றோடு, சிதம்பரம் அவர்களின் கூற்றையும் ஒன்றாக்கி,
தனது தரப்பு சங்பரிவாரங்களின் பயங்கரவாதத்தை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மறைக்கமுயல்வது, சோற்றில் முழுப் பூசணிக்காயை அல்ல; முழு யானையையே மறைக்கும் செயலாகும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
0 comments: on "பாதிரியாரைக் காட்டி காவியைக் காக்க பாஜக முயற்சி"
Post a Comment