வாஷிங்டன்,செப்.11:இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமெரிக்க மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தின் 9-ம் ஆண்டு நினைவு நாளில் குர்ஆனை எரிக்கப் போவதாக இவர் அறிவித்திருந்தார். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து தனது திட்டத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் உள்ள தேவாலயத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், தனது அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் இதைக் கைவிடுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தில் புதிதாக உருவாகும் கட்டடம் அருகே கட்டுவதாக இருந்த இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசல் ஆகியவற்றை வேறு இடத்தில் கட்டுவதாக உறுதி மொழி கொடுத்ததைத் தொடர்ந்து தனது திட்டத்தை வாபஸ் பெற்றதாக டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்தார்.
ஆனால், இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டிக் கொள்வது தொடர்பாக எவ்வித உறுதி மொழியும் அளிக்கவில்லை என்று இஸ்லாமிய மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வார இறுதியில் நியூயார்க் சென்று அங்கு இமாம் ஃபைசல் அப்துல் ரயூஃபை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் ஜோன்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபுளோரிடாவில் உள்ள மதத் தலைவர் முகமது முஸ்ரியிடம் பேசியதாகவும், வேறிடத்தில் இஸ்லாமிய மையம் அமைக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இதை ரயூஃப் மறுத்துள்ளார். குரான் எரிப்பு திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மையத்தை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஜோன்ஸ் மற்றும் முஸ்ரியின் அறிவிப்புகள் ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார். இது குறித்து அமெரிக்க அரசுடன் பேரம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் காக்கவே தாங்கள் விரும்புவதாக ரயூஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வேறிடத்துக்கு மாறப் போவதான அறிவிப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அமெரிக்கா அல்ல என்பதற்காக ஒபாமா நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் டெர்ரி ஜோன்ஸின் பேச்சால் சிதைந்துள்ளது.
முன்னதாக டெர்ரி ஜோன்ஸ் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ச் சந்தித்துப் பேசினார்.
0 comments: on "குர்ஆன் எரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது"
Post a Comment