திருச்சி: திருச்சி யில் இருதய நோயால் மூன்று வயது சிறுவன் கடும் துயரம் அனுபவித்து வருகின்றான். அறுவைச் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல், அவனது ஏழைக் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது.
திருச்சி கீழ்கண்டார் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (30), இவர் பொன்மலை காந்தி மார்க்கெட்டில் பழம் வாங்கி வந்து தலையில் வைத்து தினசரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா (25). கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு விக்னேஷ் (5), நாகேந்திரன் (3) என்ற இரண்டு மகன் உள்ளனர்.
இதில் நாகேந்திரனுக்கு இதயத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது. மேலும் இதயத்தில் நல்ல ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் பிரிக்கும் இரு வால்வுகளும், இதயத்தின் வலதுபக்கமாக ஒரே இடத்தில் உள்ளன.
இதனால் ஒரு வால்வைப் பிரித்து இடப் பக்கம் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சனையால் சிறுவன் நாகேந்திரன் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான். நிற்கக் கூட முடியாமல் பல நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது.
மகன் படும் வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை க்குத்தான் செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் அக்கம் பக்கத்தில் சில ஆயிரம் ரூபாய்கள் கடன் வாங்கிக் கொண்டு அங்கு சென்றும் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பலன் இல்லை.
எப்படியும் மகனை நோயின் கோரப்பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்த ராமசந்திரன் தனது மனைவியின் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்துள்ளார்.
அங்கு பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை முடிந்த நிலையில் அந்த சிறுவனுக்கு இருதய ஆபரேஷன் செய்ய ரூ 2 லட்சம் தேவை என்று மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது என்று தெரியாமல், நாகேந்திரனின் குடும்பம் மலைத்துப் போயுள்ளது.
Source : தட்ஸ்தமிழ்
0 comments: on "இருதய ஆபரேஷனுக்கு பணமின்றி தவிக்கும் 3 வயது சிறுவன்"
Post a Comment