சென்னை: முஸ்லிம் தீவிரவாதம் , இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற, மாநில காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டில் நாட்டில் 'காவி பயங்கரவாதம்' புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது என்று கூறியதோடு, பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம்தான் காரணம் என்று விளக்கியுள்ளார்.
உள்துறை அமைச்சர் காவி பயங்கரவாதம் என்று சுட்டிக்காட்டியவுடன், ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. அதன் சுற்றுக்கோளான சிவசேனா போன்ற கட்சிகளுக்கு ஆத்திரம் பொங்கி, பொத்துக்கொண்டு வருவானேன்?.
பாபர் மசூதி இடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்புவரை ராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, துப்பாக்கிகள், அபிநவ் பாரத் என்ற பயங்கரவாதிகள் காவி உடை அணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை உலகே அறியும் உண்மையாயிற்றே.
வழக்குகள் இன்னும் இருக்கிறது. நீதிபதி லிபரான் கமிஷனின் அறிக்கையை ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்ததால், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இப்படி கொக்கரிக்கின்றன.
உண்மையைக் கூறியதால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா?.
இதைக்கேட்க குற்றவாளிகள் பட்டியலில் வழக்கு மன்றத்தில் உள்ள இவர்களுக்கு எந்த உரிமையும் தார்மீக உரிமையும் கிடையாது.
இந்தியாவில் மூன்று முறை தொடர்ந்து மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். காவி அமைப்பு, பச்சைத் தமிழர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போது அவர் வீட்டையே தீவைத்துக் கொளுத்தி உயிரோடு கொல்ல முயற்சித்த கூட்டம் இந்த நிர்வாண காவிச் சாமியார் கூட்டம் அல்லவா?.
லல்லு பிரசாத், ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளுக்குத் தடையே விதிக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வந்தால் ஒழிய இந்த காவி பயங்கரவாதம், பாபர் மசூதி இடிப்பு முதல் மாலேகான் குண்டு வெடிப்புவரை தொடரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியாது.
பயங்கரவாதத்தில் முஸ்லிம் தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை உண்மை விளக்கத்திற்காக பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார்
Source : தட்ஸ்தமிழ்
0 comments: on "ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் வடிவமான பாஜகவுக்கு ஆத்திரம் வருவது ஏன்?: கி.வீரமணி"
Post a Comment