
NOV 21
இந்தியாவின் சரக்கு போக்குவரத்து திட்டத்துக்கு ஜப்பான் ரூ.12,430 கோடி கடன் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா கூறினார். கம்போடியா தலைநகர் நாம¢பென்னில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். இதன்பின், பிரதமர் மன்மோகனும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவும் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, தென்னிந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக சாலை அமைக்கும் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.12,430 கோடி கடன் வழங்குவதாக நோடா தெரிவித்தார். இதற்கு பிரதமர் மன்மோகன் மகிழ்ச்சி தெரிவித்தார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் முதலீடு செய்தது போல ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் கூறினார்.
ஜப்பான் பிரதமர் நோடா கூறுகையில், ‘இந்தியா ஜப்பான் நாடுகளிடையே 60 ஆண்டுகளுக்கு மேலாக நட்புறவு நிலவுகிறது. இந்தியாவில் அதிவிரைவு ரயில்வே அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சு நடத்த ஜப்பான் ஆர்வமாக உள்ளது’ என்று கூறினார்.
அரிய கச்சா பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சமுதாய பாதுகாப்பு தொடர்பாக நவம்பர் 16ம் தேதி டோக்கியோவில் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இரு தலைவர்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். ஜப்பானுக்கு நவம்பர் 15ம் தேதி முதல் 3 நாள் பயணத்தை மேற்கொள்ள மன்மோகன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜப்பானில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் பிரதமரின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
0 comments: on "இந்தியாவுக்கு ஜப்பான் கொடுக்கும் ரூ.12,430 கோடி கடன் "
Post a Comment