தலைப்புச் செய்தி

Sunday, July 1, 2012

சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை


முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.
ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இதனையடுத்து சட்ட நடவடிக்கை அதிகாரிகள் அந்த மருத்துவர் மீது கிரிமினல் வழக்கை தொடுத்தனர், ஆனால் மருத்துவரை நீதிமன்றம் விடுவித்தது.
மேலும் ஒப்புதல் வழங்கக்கூடிய வயது வராத ஒரு பிள்ளைக்கு மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது அப்பிள்ளைக்கு உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனவே குழந்தைகளுக்கு பெற்றோர்கள், தங்களது விருப்பப்படி சுன்னத்து செய்து வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் நாற்பது லட்சம் முஸ்லிம்களும், ஒன்றரை லட்சம் யூதர்களும் வாழும் நாடு ஜேர்மனி.
 நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மக்களுடைய மத சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் என ஜேர்மனியின் முஸ்லிம் மற்றும் யூத சமூகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தடை அல்ல என்றும், பிள்ளைக்கு ஒப்புதல் வழங்குவதற்குரிய வயதுவரும் வரை பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்பதாகத் தான் தற்போதைய தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சட்ட நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் பெர்லின் நகரின் யூத மருத்துவமனை சட்டம் என்ன சொல்கிறது என்ற தெளிவு ஏற்படாதவரை, தாங்கள் செய்யக்கூடிய சுன்னத்துகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே கூறுகையில், மக்களின் மத ரீதியான உரிமைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளிக்கிற ஒரு தேசம் ஜேர்மனி என்று தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை"

Post a Comment