தலைப்புச் செய்தி

Thursday, June 21, 2012

காலாங்காத்தால 'ஓவர்' சிரிப்பு... 'லாப்டர் யோகா கிளப்'பை மூட உத்தரவிட்ட மும்பை கோர்ட் !


மும்பை: காலை நேரத்தில் லாப்டர் யோகா கிளப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக கூடி சத்தம் போட்டு சிரித்ததால், அதைத் தொந்தரவாக கருதிய முதியவர் ஒருவர் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் அந்த நகைச்சுவை கிளப்பை சேர்ந்தவர்கள் சிரிக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டு விட்டது.லாப்டர் தெரப்பி என்பது மேற்கத்திய நாடுகளில் எப்போதோ பிரபலமான ஒன்று. 
நமது நாட்டிலும் இப்போது அது பிரபலமாகி விட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் நகைச்சுவையாளர் கிளப்கள் அதிகரித்து விட்டன. இந்த கிளப்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் ஏதாவது ஒரு பொது இடத்தில் கூடி விழுந்து விழுந்து சிரிப்பார்கள். கண்களில் நீர் வடிய இவர்கள் சிரிப்பது வழக்கம்.
ஆனால் இப்படிப்பட்ட லாப்டர் யோகா கிளப் ஒன்றுக்கு சிரிப்பை நிறுத்தும்படி மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு விட்டது....
மும்பை குர்லாவைச் சேர்ந்தவர் வினாயக் சிர்சாத். இவருக்கு 78 வயதாகிறது. இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். அதில், எனது பகுதியில் ஒரு லாப்டர் யோகா கிளப் உள்ளது. இந்த கிளப்பைச் சேர்ந்தவர்கள் தினசரி காலை 7 மணிக்கு எனது வீடு அருகே கூடுகிறார்கள். பின்னர் சத்தம் போட்டும், அசிங்கமாகவும் உரக்க சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களால் எனக்கு பெரும் மன உளைச்சலும், நிம்மதியின்மையும் ஏற்படுகிறது.
இவர்களது சிரிப்பு மிகவும் சத்தமாக இருப்பதால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அப்பகுதி பொதுமக்களுக்கும் பெரும் தொந்தரவாக இருக்கிறது.
யாராவது லேசாக சிரித்தால் கூட மற்றவர்கள் அவரை சத்தம் போட்டு சிரிக்குமாறு தூண்டுகிறார்கள். இவர்கள் சிரிப்பதை விட மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே வருவது போலத் தெரிகிறது.
இதை உடனே தடுத்து இவர்கள் இப்படி தெருவில் கூடி நின்று சிரிப்பதற்குத் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடுத்தவர் வீட்டின் முன்பு கூடி சத்தம் போட்டு சிரிப்பதும், தொந்தரவு செய்வதும் நல்லதில்லை, முறையில்லை. எனவே இந்த கிளப்புக்கு அப்பகுதியில் நின்று சிரிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று அதிரடி உத்தரவிட்டனர்.
மேலும் லாப்டர் கிளப்பைச் சேர்ந்தவர்களை சிரிக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதை ஒரு வாரத்திற்குள் சொல்லுமாறு காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1995ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கத்தாரியா என்பவர்தான் இந்தியாவில் இந்த லாப்டர் யோகா தெரப்பியை அறிமுகம் செய்தவர். அதன் பிறகு அதிக நாடு முழுவதும் பரவி விட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காலாங்காத்தால 'ஓவர்' சிரிப்பு... 'லாப்டர் யோகா கிளப்'பை மூட உத்தரவிட்ட மும்பை கோர்ட் !"

Post a Comment