தலைப்புச் செய்தி

Saturday, June 30, 2012

அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு

ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை அமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன.
இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சீனாவும் சிங்கப்பூரும் ஈரானிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமான அளவு குறைத்துவிட்டன என்று நான் உறுதி செய்து கொண்டுள்ளேன்.
இதனால் பொருளாதார தடைவிதிப்புச் சட்டத்திலிருந்து இந்த இரு நாடுகளுக்கும் விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.
ஈரான் பொருளாதாரத் தடைச் சட்டத்தின் கீழ் அந்த நாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்களுக்கு 180 நாள்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இது மேலும் நீட்டிக்கப்படக் கூடியது. இத்துடன் மொத்தம் 20 நாடுகளுக்கு இது போன்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலக அணு சக்திக் கொள்கைக்கு விரோதமாக ஈரான் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அதற்கு ஈரான் தர வேண்டிய பொருளாதார விலை மகத்தானது என்பதை இந்த 20 நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையானது எடுத்துக் காட்டும்.
சர்வதேச எரிபொருள் ஏஜென்சியின் புள்ளிவிவரப்படி, 2011-ம் ஆண்டில் ஈரான் ஏற்றுமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு 25 லட்சம் பீப்பாய்கள் என்று இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் காலாண்டு விகிதத்தில் ஈரானுக்கு ஏறத்தாழ ரூ. 44 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு நேரிடுகிறது.
ஐரோப்பிய யூனியனின் எண்ணெய் இறக்குமதி தடை ஜூலை முதல் தேதி அமலுக்கு வருகிறது. உலக நாடுகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அந்நாடு இனி உணரும்.
இன்று முதல்(ஜூன் 28) அமெரிக்காவின் விலக்கைப் பெறாமல் ஈரானின் பெட்ரோலியம், பிற பெட்ரோலியப் பொருள்களை வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனம் ஈரான் மத்திய வங்கியுடன் பரிவர்த்தனை நடத்தினாலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்று ஹிலரி கிளிண்டன் எச்சரித்திருக்கிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு"

Post a Comment