தலைப்புச் செய்தி

Saturday, June 30, 2012

குஜராத்:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது அஹ்மதாபாத் நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கொடூரமாக கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜூன் 30) தீர்ப்பு வழங்க உள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நரேந்திரமோடி அரசில் முன்னாள் அமைச்சரும் அடங்குவார்.
கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக் கடந்த மாதம் வழக்கு விசாரணையை பூர்த்திச் செய்து தீர்ப்பை இன்று ஒத்திவைத்திருந்தார். இவ்வழக்கில் நரேந்திர மோடி அரசின் முன்னாள் அமைச்சரும், நரோடா எம்.எல்.ஏவுமான மாயாகோட்னானி, முன்னாள் விசுவஹிந்து பரிஷத் தலைவன் பாபு பஜ்ரங்கி, பா.ஜ.க தலைவர்களான பிபின் பஞ்சல், கிஷன் கொரானி, அசோக் சிந்தி, ராஜு சவ்மல் ஆகியோர் உட்பட 51 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
2002 பிப்ரவரி 28-ஆம் தேதி விசுவஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்த குஜராத் முழு அடைப்பின்போது நரோடா பாட்டியாவில் ஹிந்துத்துவா வெறிக்கும்பல் தாக்குதலை அரங்கேற்றியது. முந்தைய தினம் கோத்ராவில் ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி இந்த முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கோட்னானியின் தலைமையில் ஆயுதங்களை ஏந்திய ஹிந்துத்துவா வெறிப்பிடித்த கும்பல் நரோடா பாட்டியாவில் ஒன்றிணைந்து 97 முஸ்லிம்களை கொலைச் செய்ததாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. தாக்குதலில் 33 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2009 ஆகஸ்ட் மாதம் விசாரணை துவங்கியது. 62 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஜய் ஷெட்டி விசாரணையின்போது பலியானார்.
நேரடி சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், போலீஸ், அரசு அதிகாரிகள், தடவியில் நிபுணர்கள், ஆஷிஷ் கேதான் போன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 372 பேரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
46 பேரை முதலில் இவ்வழக்கில் போலீஸ் கைது செய்தது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்ட பிறகு மேலும் 24 பேர் கைதானார்கள். குற்றம் சுமத்துவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் மரணித்தார்கள். ஜாமீனில் வெளிவந்த மோகன் நேப்பாளி, தேஜஸ் பதக் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குஜராத்:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!"

Post a Comment