அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும் தலையிலும், மார்பிலும் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடப்பட்ட நிலையில் அருகில் இருந்த வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருந்தன. இரண்டு சடலங்களினதும் கைகள் முதுகுக்குப் பின்னால் இணைத்துக் கட்டப்பட்ட நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட மேற்படி பலஸ்தீனர்களின் கிராமங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளதோடு, பிரதான நுழைவாயில்கள் அருகே பெரும் படைப் பிரிவொன்று நிலைகொண்டுள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த பல மாதங்களாக இப்பிரதேசத்தில் வாழும் பலஸ்தீன் பொதுமக்கள் மீது யூத ஆக்கிரமிப்பாளர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் பூரண ஒத்துழைப்போடு தொடர்ச்சியான அடாவடித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'தன்னுடைய தற்காப்புக்காக வண்டிச் சாரதியான யூத ஆக்கிரமிப்பாளர் ஒருவர் மேற்படி பலஸ்தீனர்கள் இருவரையும் சுட்டுக் கொன்ற'தாக இஸ்ரேலிய ஹீப்ரு பத்திரிகை யேடியெட் அஹ்ரொனொட் வழக்கம்போல் மழுப்பலாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக, பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிராக நாளாந்தம் யூத ஆக்கிரமிப்பாளர்களும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரும் செய்துவரும் அட்டூழியங்கள் தொடர்பில் தலையிட்டு, பலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர முன்வருமாறு சர்வதேச உலகை நோக்கி பலஸ்தீன் மக்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
0 comments: on "யூத ஆக்கிரமிப்பாளர் வெறியாட்டம்: இரு அப்பாவிகள் பலி"
Post a Comment