தலைப்புச் செய்தி

Thursday, June 14, 2012

பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராகப் புதிய திட்டம்


நவீன யுகத்தில் வாழ்க்கை முற்றிலும் இயந்திரகதியில் மாறிப்போய்விட்டது. தனிக் குடும்ப அலகுகள் தோற்றம் பெற்று கூட்டுக்குடும்ப அமைப்பு பெரிதும் அருகிவிட்டது. பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் தொகை பெருகி வருகின்றன. 

இந்நிலையில், தம்முடைய பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளிடமிருந்து அவர்களால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு மாதாந்தம் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொடுக்கும் திட்டமொன்றை மூத்த பிரஜைகள் செயலகம் ஆரம்பித்துள்ளதாக மேற்படி செயலகப் பணிப்பாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

"தமது பிள்ளைகளால் முறைப்படி பராமரிக்கப்படாமல் நிராதரவான நிலையில் இருக்கும் பெற்றோர், கடிதம் மூலமோ தொலைபேசி ஊடாகவோ முறைப்பாடு செய்யும் பட்சத்தில், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் நலன்கருதி இத்தகைய திட்டமொன்று அமுல்நடத்தப்பட்ட போதிலும், நிராதரவான நிலையில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதில்லை என்றும், மிகக் குறைந்தளவானவர்களே இவ்வாறு பராமரிப்புக்கோரி முறையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "பராமரிக்கப்படாத பெற்றோர் குறித்து அவர்களின் உறவினர்களோ, அயலவர்களோ மூத்த பிரஜைகள் செயலகத்திற்கு முறைப்பாடு செய்யலாம். இது தொடர்பான முறைப்பாடுகளை செயலகத்தின் 150 ஏ, எல். எச். பி. கட்டிடம், நாவல, நுகேகொட என்ற விலாசத்திற்கோ, 0112824082 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம்" எனவும் பணிப்பாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

"பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் பராமரிப்புச் சபையொன்று நிறுவப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் ஆராயப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் அழைக்கப்படுவர். அதன்பின், பராமரிப்புத் தொகை குறித்துக் கலந்தாலோசித்துத் தீர்மானிக்கப்படும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராகப் புதிய திட்டம்"

Post a Comment