தலைப்புச் செய்தி

Thursday, March 22, 2012

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடைகள்: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தா விட்டால் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இச்செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு சக்தி திட்டங்கள் அமைதிப் பணிகளுக்கானவை என அந்நாடு கூறி வந்தாலும், அதை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
அதனால் ஈரானை தங்கள் வசப்படுத்த அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சர்வதேச அரங்கில் அந்நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், ஜூன் மாதம் 28ம் திகதிக்குள் படிப்படியாக தங்கள் இறக்குமதியைக் கணிசமான அளவிற்கு குறைக்க வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையை உறுதி செய்யும் விதத்தில் நேற்று முன்தினம், அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் 11 நாடுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.
இந்நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமான அளவில் குறைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையச் சட்டம் 2012ன்படி இந்நாடுகளின் மீது அமெரிக்கா எவ்வித பொருளாதாரத் தடையையும் விதிக்காது என உறுதியளித்தார். பிற நாடுகள் இந்நாடுகளை தங்கள் வழிகாட்டிகளாகக் கருதி இவற்றின் வழி நடக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பட்டியலில் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், செக் குடியரசு, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஒரே ஒரு ஆசிய நாடான ஜப்பானும் இடம் பெற்றுள்ளன. இதில் ஜப்பான் ஈரான் எண்ணெய் இறக்குமதியை 15 முதல் 22 சதவிகிதம் வரை குறைத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடைகள்: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை"

Post a Comment