புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோரமான முஸ்லிம் இனப் படுகொலைக்கு காரணமான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது இமேஜை மேம்படுத்த நடத்திய சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டங்களின் செலவு கணக்கை வெளியிடாமல் இருக்க தகிடுதத்தம் புரிந்து வருகிறது.
மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்கவே உண்ணாவிரதம் நடத்தியதாக புதிய வாதத்தை முன்வைத்துள்ளது. மோடி அரசின் உள்துறை ஆளுநர் கமலா பெனிவாலுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளது.
சமூகங்கள் இடையே நல்லிணக்க சூழலை உருவாக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இருந்து கிடைத்த சுற்றறிக்கைகளின் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியதாக மோடி அரசு காதில் பூ சுற்றுகிறது.
2011 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் கடந்தமாதம் 12-ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மோடி நடத்திய உண்ணாவிரதங்களின் செலவை வெளியிடக்கோரி முன்னாள் உள்துறை அமைச்சர் கோர்டான் ஸடாஃபியா ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்திற்கு அளித்த பதிலில் குஜராத் மோடி அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இக்கோரிக்கையை முன்வைத்து நான்கு தடவை கடிதம் எழுதிய பிறகும் மோடி அரசு பதில் அளிக்க தயாராகவில்லை. குஜராத்தில் ஆரம்ப மோடி அரசில் உள்துறை அமைச்சராகவும், மோடிக்கு நெருக்கமானவராகவும் திகழ்ந்த ஸடாஃபியா தற்பொழுது மஹா குஜராத் என்ற கட்சிக்கு தலைவராக உள்ளார்.
அதேவேளையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மொத்தம் செலவழித்த தொகையை வெளியிடாத மோடி அரசு குஜராத் பல்கலைக்கழக கன்வென்சன் சென்டரில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 1.57 கோடி ரூபாய் செலவானதாக தெரிவித்துள்ளது. இத்தொகையை பல்வேறு துறைகளில் இருந்து சேகரித்ததாக மோடி அரசு பதில் அளித்துள்ளது. ஆனால், தனக்கு கிடைத்த பதில் பொய் என்று ஸடாஃபியா கூறுகிறார். மத்திய அரசின் எந்த சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் அரசின் பதிலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தனது மூக்கிற்கு கீழே மனித குருதி ஓடும்பொழுது அதனை காணாதது போல் நடிக்க மோடிக்கு மத்திய அரசு உத்தரவிட்டதா? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் வாழும் மக்கள் புல்லை தின்பவர்கள் அல்லர் என்பதை மோடியும், பா.ஜ.கவும் நம்பினால் இத்தகைய பதிலை அளித்திருக்கமாட்டார்கள் என்று சிங்வி கூறியுள்ளார்.





0 comments: on "உண்ணாவிரத செலவு கணக்கை காட்டாமல் இருக்க மோடி அரசின் ஏமாற்றுவேலை!"
Post a Comment