ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற வேண்டுமெனவும் அப்போது தாம் அமைதியாக வாழ முடியும் எனவும் ஆப்கானிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கந்தகார் மாகாணத்தில் அமெரிக்க சிப்பாய் ஒருவரினால் 16 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தாக்குதல் துருப்பினர் ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னரும் அமெரிக்காவின் ஆலோசகர்களும் விசேட படையினரும் ஆப்கானிஸ்தானில் நிலைகொள்வதற்கு அனுமதிக்கும் தந்திரோபாய பங்குடைமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்த பேச்சுவார்த்தையில் சில தினங்களுக்குமுன் காபூலும் வாஷிங்டனும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருந்தன.
எனினும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலானது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை தாமதமாக்கலாம் என ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பொதுமக்கள் உறவில் புதிய பேரழிவாகும். இது 11 ஆவது வருடத்திலுள்ள இந்த யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையலாம்.
இத்தாக்குதலை ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கண்டித்ததுடன் ஆப்காகிஸ்தானியர்கள் பொறுமையிழந்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படையினர் திட்டமிட்டதற்கு முன்னரே வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை இக்கொலைகள் ஏற்படுத்தியுள்ளன.
வெளிநாட்டுப் படையினரால் நாம் அடைந்த நன்மைகள் சிறிதளவுதான். ஆனால் அனைத்தையும் இழந்துவிட்டோம். – எமது உயிர்கள், கௌரவம், எமது நாட்டை அவர்களிடம் இழந்துவிட்டோம்' என கந்தகாரிலுள்ள கடை உரிமையாளரான ஹாஜி நஜிக் தெரிவித்துள்ளார்.
'விளக்கங்களோ மன்னிப்புக் கோரல்களோ இறந்தவர்களை மீளக்கொண்டுவர மாட்டா. எமது தனியே அமைதியாக வாழ விட்டுவிட்டுச் செல்வது அவர்களுக்கு நல்லது' என அவர்கூறியுள்ளார்.
கடந்த மாதம் நேட்டோ படைத்தளத்தில் புனித குர் ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டதையடுத்து கிளர்ந்த அமெரிக்க எதிர்ப்புணர்வு கந்தகார் படுகொலைகளையடுத்து தீவிரமாகியுள்ளது.





0 comments: on "அமெரிக்கப் படையினர் வெளியேறினால் அமைதியாக வாழ முடியும்: ஆப்கானியர்கள்"
Post a Comment