தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட நேரங்களை விட அதிகளவில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதால், எஸ்.எஸ்.எல்.சி, +2 மாணவ – மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து உயரும் என்று தெரிகிறது
2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டது.
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தம் மாதம் முதல் தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்படுவதால் வாரியத்தின் வருவாய் உயரும் என்ற காரணத்தை காட்டித்தான் மின்வாரியம் புதிய கடன்களை வாங்கி உள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களில் மின்கட்டண உயர்விற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை கிளப்பி இருக்கிறது.





0 comments: on "வதைக்கும் மின்வெட்டு – உயரும் மின் கட்டணம்..!"
Post a Comment