பொருளாதார பற்றாக்குறையின் காரணத்தினால் செலவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் 48,700 கோடி அமெரிக்க டொலர்களை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
செலவைக் குறைக்க அரசு தயாரித்துள்ள திட்டங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனெட்டா கூறியதாவது: தற்பொழுது 5,62,000 போர் வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 4,90,000 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு 2017ம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம். குறிப்பாக கடற்படையில் மட்டும் 20,000 வீரர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் பல ஆண்டுகளாக சேவையில் உள்ள சில போர் விமானங்கள், படையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும். விமானப்படையில் மொத்தமுள்ள 60 படையணிகளில் 6-ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏவுகணைகளை செலுத்துவதற்கான வசதியில்லாத போர்க்கப்பல்களை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இராணுவம் சார்ந்த சில பணிகளை ஒப்பந்தமுறையில் விடுவது, பணியாளர்களை முறைப்படுத்துவது போன்றவை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 6,000 கோடி அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும்.
எனினும் உலகம் முழுவதும் எந்தப் பகுதிக்கும் விரைவாக சென்று சேரும் வகையில் இராணுவப் படையணிகள் தயார் நிலையில் வைக்கப்படும். குறிப்பாக ஆசிய - பசிபிக் பகுதிகளிலும், மத்திய கிழக்கு பகுதிகளிலும் எதிரிகளின் தற்காப்பு அரண்களை தகர்க்க ஏதுவாக அடுத்த தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
வானில் பறந்தபடியே போர் விமானங்களில் எரிபொருளை நிரப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவுள்ளோம். அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகளின் ஒத்துழைப்புடன் அப்பகுதிகளில் கடற்படையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பஹ்ரைனில் ரோந்து கப்பலையும், சிங்கப்பூரில் சிறிய அளவிலான போர்க் கப்பலையும் நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.





0 comments: on "பொருளாதார பற்றாக்குறையினால் இராணுவத்தில் மாற்றம் மேற்கொள்ளும் அமெரிக்கா"
Post a Comment