பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின்(ஐஎஸ்ஐ) தலைவரான அகமது ஷுஜா பாஷாவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
ஐஎஸ்ஐ தலைவர் பாஷா, இராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானிக்கு மிகவும் நெருக்கமானவர். இராணுவம், ஐ.எஸ்.ஐ.யின் முடிவே அரசின் முடிவாக பெரும்பாலும் இருக்கும்.
பாஷாவின் பதவி காலம் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. எனினும் கயானிக்கு நெருக்கமானவர் என்பதால், 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக பிரதமர் கிலானிக்கும், கயானிக்கும் கருத்து வேறுபாடு முற்றியுள்ளது.
அதனால் ஐஎஸ்ஐ தலைவர் பாஷாவின் பதவி காலத்தை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. அவருக்கு பதில் புதிய தலைவரை பாகிஸ்தான் அரசு நியமிக்க திட்டமிட்டுள்ளது என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய தலைவர் பதவிக்கு 3 பேர் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி ஜெனரல் வாஷித் அஷ்ரத், கராச்சி இராணுவ படை கமாண்டர் ஜெனரல் முகமது ஜாகிருல் இஸ்லாம், பெஷாவர் இராணுவ படை கமாண்டர் ஜெனரல் காலித் ரபானி ஆகியோரில் ஒருவர் ஐஎஸ்ஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதியுடன் பாஷாவின் பதவி காலம் முடிவடைவதால் அதற்கு முன்னதாக ஐஎஸ்ஐ.க்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments: on "ஐஎஸ்ஐ தலைவருக்கு பதவி நீட்டிப்பு சந்தேகம்"
Post a Comment